ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி
ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி

ஜமாலிய்யா சையது கலீல் அவ்ன் மௌலானா (வாப்பா நாயகம்)

ஜமாலிய்யா சையது கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்கள் நபிகள் நாயகம் ( ஸல் அலை) அவர்களின் பரிசுத்தமான திருக்குடும்பத்தில் 34ம் தலைமுறைத் தோன்றலாகவும் வலிகள் கோமான் கௌதுல் அஉலம் முஹியுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் 21-ம் தலைமுறையாய் உதித்தவருமாவார்கள்.


இவர்களின் பாட்டனார் கௌதுஸ்ஸமான் ஜமாலிய்யா மௌலானா அவர்கள் பகுதாதிலிருந்து இந்தியா வந்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானம் பரப்பி தமிழகத்திலுள்ள சம்பைப்பட்டினத்தில் அடக்கமாயுள்ளார்கள்.

    -  புகாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதியவர்களும் 

    -  அரபு-அரபுத்தமிழ் அகராதியை முஸ்லிம் உலகிற்குத் தொகுத்து வழங்கியவர்களும். 

    - இன்ஸானுல் காமில் என்ற ஆத்மஞான நூலுக்கு விரிவுரை எழுதியவர்களும். 

அரபு மொழியில் நிகரில்லாப் புலமை பெற்று அது போன்றே பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நடமாடும் பல்கலைக் கழகமாக விளங்கியவர்கள்.


குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் இவர்களின் தந்தையாவார்கள். அவுன் நாயகமவர்கள் தங்கள் தந்தையாரிடமே அரபிக் கல்வியையும். ஆன்மீகக் கல்வியையும் முழுமையாகப் பயின்று அவர்களின் ஆன்மீக வாரிசாகத் திகழ்கிறார்கள். அவர்கள் தோற்றுவித்த அத்தரீகதுல் ஹக்கியதுல் காதிரிய்யா வெனும் லஜ்னதுல் இர்பானித் தவ்ஹீத் (ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை) ஏற்படுத்தி மக்களுக்கு ஆன்மீக அறிவூட்டும் ஒப்பற்ற காமில் ஷெய்காக விளங்குகிறார்கள்…!


அரபு மொழியில் இவர்கள் இயற்றியுள்ள பேரின்பப்பாக்கள் இவர்களின் அரபுமொழிப் புலமையையும் ஆன்மீக உச்சத்தையும் புலப்படுத்தும். தமிழ்மொழியில் இவர்கள் பெற்றிருக்கும் புலமையோ வார்த்தைகளால் வடிக்க முடியாதது. சங்ககாலப் புலமையை இவர்களின் தமிழ் ஆக்கங்களில் காணமுடியும். தமிழுக்கு ஒரு புதிய பிரபந்தத்தையே தோற்றுவித்துத் தந்த நாயகர் பன்னிருபாடல் இசித்திரக் கவிகளால் அலங்கரிக்கப்பட்ட மகானந்தாலங்காரமாலை இலங்கைச் சாகித்திய மண்டலத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழ வள நாட்டில் பயிர்பெருக்க வாரீர் இறைவலிய் செய்யிது முஹம்மது மௌலானா போன்ற கவிதை நூற்களில் இவர்களின் யாப்புத் திறனையும் ஆழமான கவிதையாற்றலையும் காணமுடியும். ஞானம் என்றால் என்னவென்று அறிந்துத் துடிப்பவர்களுக்கு அறிமுக நூலாக எழுதப்பட்ட பேரின்பப்பாதையும், ஹகாயிகுஸ்ஸபா, துற்பதுல் முர்ஸலா போன்ற அரபு நூற்களுக்கு எழுதிய விளக்கமும் தமிழ் முஸ்லிம் உலகுக்கு இவர்கள் அளித்த ஞானப் புதையல்களாகும்.


முழுக்க முழுக்க ஞானத்தையே கருப்பொருளாகக் கொண்டு வெளிவரும் மாத இதழ் ஒன்றை மறைஞானப்பேழை என்ற பெயரில் வெளியிடச் செய்துள்ளார்கள்.


இவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையானது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இயங்கிவருகிறது. இவர்களின் ஞான வழிகாட்டல் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையிலானது.

தந்தை - குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா

பாட்டனார் - கௌதுஸ்ஸமான் ஜமாலிய்யா மௌலானா